The News Sponsor By
feature-top
feature-top

தற்கால தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவரும் மூத்த எழுத்தாளருமான சா. கந்தசாமி நேற்று (31-7-2020) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 80.

மயிலாடுதுறையில் திருமண சேலைகளுக்குப் புகழ்பெற்ற கூறைநாட்டில் 1940ஆம் ஆண்டு பிறந்தவர் சா. கந்தாமி. சிறுவயதிலேயே தந்தையை இழந்த சா.கந்தசாமி தனது 14 ஆவது வயதில் தாயார் ஜானகியுடன் சென்னைக்கு சென்றார்.

வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை பள்ளியில் பயின்ற கந்தசாமி, பள்ளிப் படிப்பு படித்த பின் சென்னை மத்திய பாலிடெக்னிக்கில் ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ பெற்றார்.

ஒருபக்கம் தொழில் ரீதியான படிப்பு என்றாலும் இன்னொரு பக்கம் சமூகம், இலக்கியம் என்று படைப்புலகிலும் ஆர்வத்தோடு செயல்பட்டார். படிப்பு முடிந்ததும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி.யில் பரிசோதனைக் கூடத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார் கந்தசாமி. படிப்படியாக இந்திய உணவுக் கழகத்தில் இணை இயக்குனர் அளவுக்கு உயர்ந்தார்.

சா. கந்தசாமி, தனது 28ஆவது வயதில் எழுதிய ‘சாயாவனம்’ என்ற நாவல் இவரை எழுத்துலகில் பிரபலப்படுத்தியது. இந்திய ஒன்றிய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளை, ‘சாயாவனம்’ நாவலை சிறந்த இந்திய நவீன இலக்கியங்களில் ஒன்றாக அறிவித்தது.

1998இல் சா. கந்தசாமி எழுதிய ‘விசாரணை கமிஷன்’ நாவலுக்காக, இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது. சுமார் ஐம்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ள சா. கந்தசாமி தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளை நன்கு அறிந்தவர்.

சா. கந்தசாமி மறைவு குறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“சாயாவனம் என்ற புதினத்தின் வாயிலாகத் தமிழ் இலக்கிய உலகில் சாகாவரம் பெற்ற படைப்பாளி – சாகித்ய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைகிறேன். எழுத்து என்பது வெற்று அலங்காரத்திற்கானதல்ல என்பதையும், அது காலம், கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படுத்தப்படும் தடைகளை உடைத்தெறியும் படைப்பாயுதமாக இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படையாக அறிவித்து, அதன்படியே படைப்புகளை வழங்கியவர் சா.கந்தசாமி. இன்றைய நிலையில் அவருடைய கருத்தும் படைப்பும் மிகவும் தேவைப்படும் சூழலில் அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார்.

நாட்டுப்புறவியலையும், நவீன இலக்கியக் கூறுகளையும் சமமான அளவில் தன் படைப்புகளில் வெளிப்படுத்திய சா.கந்தசாமி அவர்கள், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பேரன்புக்குரியவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கிய அன்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் செய்தியில்,

“மறைந்தாரே சா.கந்தசாமி! ‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே! தன்மானம் – தன்முனைப்பு தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ! சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது” என்று கசிந்துள்ளார்.

மேலும் பல்வேறு எழுத்தாளர்கள் சா. கந்தசாமிக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய சுடுமண் சிற்பங்கள் பற்றி ஆய்வு செய்துள்ள சா. கந்தசாமி, அதற்காக சர்வதேச விருது பெற்றவர்.

சா. கந்தசாமியின் மறைவுக்கு, அவரது சொந்த ஊரான மயிலாடுதுறை மக்கள் ஊரடங்கின் மத்தியிலும் தங்கள் அஞ்சலியை செலுத்தியுள்ளார்கள். மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு எழுத்தாளரும், காவிரி அமைப்பின் தலைவருமான கோமல் அன்பரசன், மயிலாடுதுறை தமிழ்ச் சங்க தலைவர் பவுல்ராஜ், அறம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிவா மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். சாலைகளில் வந்து சென்ற மக்களும், ‘சாகித்ய அகாடமி விருது வாங்கின இவரு நம்மூர்க்காரரா?” என்ற ஆச்சரியத்தோடு சா. கந்தசாமிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

“பிறந்த மண்ணின் மீது மிகுந்த பற்று கொண்ட சா.கந்தசாமி, சமூகத்தைப் பாதிக்கும் தீங்குகளை எதிர்க்கும் ஆயுதமாக எழுத்தைப் பயன்படுத்தினார். தேசிய அளவில் தமிழ் இலக்கியத்தின் முகங்களில் ஒருவராகவும் பல்வேறு மாநில மொழி படைப்பாளர்கள் மதிக்கத்தக்க இலக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்தவர்” என்றனர் அஞ்சலி செலுத்திய பிரமுகர்கள்.

Share This News
feature-top
feature-top