The News Sponsor By
feature-top
feature-top

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி தேர்தலும் நடப்பதால், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

தற்போது அமெரிக்க செனட் சபை உறுப்பினராக இருக்கும் 55 வயதான கமலா ஹாரிசின் தந்தை டெனால்டு ஹாரிஸ் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜமைக்காவை பூர்வீகமாக கொண்டவர்; தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர். டெனால்டு ஹாரிஸ்-சியாமளா கோபாலன் தம்பதிக்கு, கலிபோர்னியாவில் 1964-ம் ஆண்டு கமலா ஹாரிஸ் பிறந்தார்.

ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் அவர் அமெரிக்காவில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கியம் ஆகும்.அமெரிக்காவில் தற்போது நிறவெறி பிரச்சினை தலைதூக்கி இருக்கும் நிலையில் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணான கமலா ஹாரிசை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்து எடுத்து இருப்பதை முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்று உள்ளனர். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அவர் முதல் கறுப்பின துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெறுவார்.

இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கமலா ஹாரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதியாகவோ, துணை ஜனாதிபதியாகவோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதி இல்லாமல் போகலாம் என்று சாப்மேன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் ஈஸ்ட்மேன் பத்திரிகையில் கட்டுரை எழுதி இருக்கிறாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதில் அளிக்கையில், அந்த தகவல் சரியானதா என்றும், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் கமலா ஹாரிசுக்கு இருக்கிறதா? என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியவில்லை என்று பதில் அளித்தார்.

கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறக்காதவராக இருந்தால், தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என்றும் அப்போது கூறினார். அத்துடன், கமலா ஹாரிசை வேட்பாளராக தேர்வு செய்யும் முன்பு ஜனநாயக கட்சியினர் இந்த விவகாரம் குறித்து நன்கு ஆய்வு செய்து இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஏற்கனவே டிரம்ப், கமலா ஹாரிசுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கமலா ஹாரிசின் அமெரிக்க குடியுரிமை குறித்து பிரச்சினை கிளம்பி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

 

Share This News
feature-top
feature-top