The News Sponsor By
feature-top
feature-top

கனேடிய அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரிக்கை முன்வைத்து சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமான கடந்த 30.08.2020 அன்று, தன்னார்வ தமிழர்களால் பிராம்டனில் இருந்து நடைபயணம் ஆரமாகி, ஒட்டாவா நாடாளுமன்றத்தை இலக்கு வைத்து முன்னேறியது. இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான கனேடிய தமிழ் உறவுகளின் நீதி கோரிய கனேடிய நாடாளுமன்றத்தை நோக்கிய இறுதி நாள் (14/09/2020) நெடு நடை பயணத்தின் முடிவில் பிரதமரின் பிரதிநிதியிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது.

16 நாட்கள் இரவு-பகல் பாராது, பல்வேறு காலநிலைகளை கடந்து, தாயக நினைவுகளை மட்டுமே மனதில் சுமந்து தொடர்ந்த பயணத்தில், இடையில் மொன்றியலில் இருந்து புறப்பட்ட தன்னார்வ தமிழர்கள் அடங்கிய குழுவும் இணைந்து உற்சாகமூட்டினர். அறிக்கைகள், கண்டனங்கள் என்ற நிலையில் இருந்த கோரிக்கை, நெடிய பயணத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

தாயக உறவுகள் எந்த நாட்டில் இருந்தாலும், தாய் மண்ணின் வலி சுமந்து இனம் காப்போம் என்பதை மீண்டும் ஒருமுறை, கனேடிய தமிழர்கள் நிரூபித்துள்ளனர். நேற்று (14/09/2020)  இறுதி நாள் நடை பயணத்தில், தங்களுக்கு அளிக்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்பை துறந்து தன்னார்வ தமிழர்கள் செய்த செயல் மனதை நெகிழ வைக்கிறது.

வீடியோ இணைப்பு: https://www.facebook.com/kumar.thillainathan/videos/3481721408581083/

வலி சுமந்த நடைக்கு எதற்கு சிவப்பு கம்பள வரவேற்பு என்பதை மனதில் நினைத்து, தங்களுக்கு போடப்பட்ட சிவப்பு கம்பளத்தின் மீது மலர் தூவி, அதனையே தாயகத்துக்காக உயிர் நீத்த மாவீரர்களின் நினைவு ஸ்தூபியாக பாவித்து, தரையில் விழுந்து வணங்கினர். நானூறு கிலோமீட்டர் தூரத்திற்கும் மேல், கால் நோவ நடந்து வந்திருந்தும், ஒவ்வொரு செயல்களிலும் இம்மி பிசிறாது, தன்னார்வ தமிழர்கள் செயல்பட்ட விதம், தாயக வளர்ப்பின் நேர்த்தியை பறைசாற்றியது.

எவ்வித அமைப்புகளின் உதவியும் இன்றி, தன்னார்வமாக தமிழர்கள் ஒன்றிணைந்தால் எதையும் சாத்தியப்படுத்திகாட்ட முடியும் என்பதற்கு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீண்ட பயணம் ஆகச்சிறந்த முன்னுதாரணமாகும்.  நீதி கேட்டு நடைபயணம் ஆரம்பித்த நிகழ்விலும், நிறைவு நிகழ்விலும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், சட்டமன்ற உறுப்பினர்கள், நகர, மாநகர உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக கனேடிய வாழ் தமிழ் மக்கள் பலரும் தாமாக மனமுவந்து, நிகழ்வில் கலந்து கொண்டது, நெடிய நடைபயணத்தை பெருவெற்றியடைய செய்துள்ளது. உயிர்கொல்லி நோய் பரவி வரும் வேளையிலும் முறையாக அனுமதி பெற்று, இவ்வளவு பெரிய முன்னெடுப்பை நடத்திக்காட்டியது உலகெங்கிலும் விரவி வாழும், தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2009 ஆம் ஆண்டுக்கு பிறகு, தன் எழுச்சியோடு, இப்படியொரு மக்கள் கூட்டம் கூடியது, இது தான் முதல் முறையாக இருக்கும். நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொருவரது முகத்திலும், நம்பிக்கை நிறைந்திருப்பதை காண முடிந்தது. இதே ஒற்றுமை உணர்வோடு, இனி வரும் காலங்களில் எவ்வித தயவையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்கள் களமிறங்கும் பட்சத்தில் மாபெரும் மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதே உண்மை.

 

 

Share This News
feature-top
feature-top